மொபைல் ஃபோன்களுக்கு ரீ-சார்ஜ் செய்ய கடைகளுக்குச் சென்ற காலம் மாறி, ஸ்மார்ட்ஃபோன் வைத்திருப்பவர்கள் தங்களது போனில் உள்ள பணப்பரிமாற்ற செயலிகள் மூலமாகவே ரீ-சார்ஜ் செய்துகொள்ளலாம் என்ற நிலை வந்துவிட்டது. பொதுவாக மொபைல் ஃபோன் ரீ-சார்ஜ்களுக்குப் பணப்பரிமாற்ற செயலிகள் கட்டணம் வசூலிப்பதில்லை.
இந்தநிலையில், ஃபோன்பே செயலி குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனர்களிடமிருந்து, மொபைல் ரீ-சார்ஜ்களுக்காக கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளது. அதாவது 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையிலான ரீ-சார்ஜ்களுக்கு 1 ரூபாயையும், 100 ரூபாய்க்கு மேற்பட்ட ரீ-சார்ஜ்களுக்கு 2 ரூபாயையும் செயலாக்க கட்டணமாக (processing fee) ஃபோன்பே வசூலிக்க தொடங்கியுள்ளது. அதேநேரத்தில், 50 ரூபாய்க்கு குறைவான ரீ-சார்ஜ்களுக்கு ஃபோன்பே கட்டணம் எதையும் வசூலிக்கவில்லை.
இந்தச் செயலாக்க கட்டண வசூலிப்பு குறித்து ஃபோன்பே வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கையில், இது ஒரு சிறிய அளவிலான சோதனை என்றும், இதில் சிறிய அளவிலான பயனர்கள், சிறிய அளவிலான செயலாக்க கட்டணத்தை செலுத்துவார்கள் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், இந்த சோதனையின் முடிவைப் பொருத்து, செயலாக்க கட்டணத்தை வசூலிக்கும் முடிவு திரும்பப் பெறப்படலாம் எனவும் ஃபோன்பே கூறியுள்ளது.
இதற்கிடையே, ஃபோன்பேவின் இந்த சோதனைக்கு உள்ளான பயனர்கள், சமூகவலைதளங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றன.