நீட், ஜெ.இ.இ தேர்வுகளை நடத்துவதற்கு எதிராக வழக்குத் தொடர 7 மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன.
நேற்று தேசிய தேர்வு முகமை அறிவித்த தேதிகளில் நீட், ஜெ.இ.இ தேர்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியிருந்தது. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறுகிறது. அதேபோல் ஜெ.இ.இ மெயின் தேர்வு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. கரோனாவை கருத்தில் கொண்டு ஜெ.இ.இ தேர்வு மையங்கள் 570 லிருந்து 660 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு மையங்கள் 2,546 லிருந்து 3,843 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தில் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 705 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 990 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஆண்டை விட நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளோர் எண்ணிக்கை 13 சதவீதம் குறைந்துள்ளது. அதே நேரத்தில் பீகாரில் 28%, உத்தரபிரதேசத்தில் 16% என நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் எண்ணிக்கை கூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நீட், ஜெ.இ.இ தேர்வுகளை தற்பொழுது நடத்தக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர பஞ்சாப், ராஜஸ்தான், சதீஷ்கர், புதுச்சேரி, மேற்கு வங்கம் என மொத்தம் 7 மாநிலங்கள் முடிவு செய்துள்ளது. சோனியாவுடனான ஆலோசனைக்குப் பின் ஜார்கண்ட், மகாராஷ்டிர மாநில அரசுகளும் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் நீட் தேர்வு கட்டாயம் நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை இயக்குனர் தெரிவித்துள்ளார்.