நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினமான கடந்த 13 ஆம் தேதி மீண்டும் நாடாளுமன்ற மக்களவையினுள் பாதுகாப்பு அத்துமீறல் நடந்தது. கடந்த 13ம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நாடாளுமன்ற வளாகத்தில் பார்வையாளர்களாக வந்திருந்த இரண்டு நபர்கள் வண்ணப் புகையை அவை முழுக்க வீசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் வந்து, பாதுகாப்பு மீறல் குறித்து விளக்கம் தர வேண்டும் என்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். அமளியில் ஈடுபட்ட 141 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து செய்தியாளர் சந்தித்த திமுக எம்பி திருச்சி சிவா, உள்துறை அமைச்சகத்தில் இருந்து அறிக்கை தருவதற்கு என்ன சங்கடம். அரசாங்கம் என்பது நாடாளுமன்றத்திற்கு பதில் சொல்ல கடமைப்பட்ட ஒரு அமைப்பு. இங்கு சொல்லாமல் எங்கே சொல்வார்கள்? நாங்கள் இங்கே பேசாமல் வேறு எங்கே பேசுவது? கோடி கணக்கான மக்கள் வாழ்கின்ற நாடு. இந்த அவையில் பேசுவது எல்லோருக்கும் சென்று சேரும். எவ்வளவு கூட்டம் போட்டாலும், எவ்வளவு பேருக்கு முன்னாள் பேசினாலும் அது சேராது. நாடாளுமன்றத்தில் நாங்கள் பேச முடியவில்லை எங்கள் குரல் நசுக்கப்படுகிறது. நாங்கள் அவமானப்படுத்தப்படுகிறோம். இந்த நேரத்தில் ஆளுங்கட்சி நினைத்ததையெல்லாம் செய்கிறது. எங்கே போகிறது நம் நாடும் ஜனநாயகமும். நாடாளுமன்றம் ஒரு கட்சிக்கு மட்டுமே என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது' என்றார்.