Skip to main content

ஜம்மு காஷ்மீரில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Published on 25/09/2024 | Edited on 25/09/2024
Phase 2 Voting Begins in Jammu and Kashmir

ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு செப்டம்பர் 18ஆம் தேதியும், அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு செப்டம்பர் 25ஆம் தேதியும், மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 1ஆம் தேதியும் நடைபெற உள்ளது எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதில் பதிவான வாக்குகள் அக்டோபர் 8ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

அந்த வகையில் இந்தத் தேர்தலில் மெகபூபா முப்தியின் காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி, பாஜக, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் புதிதாக ஆரம்பித்த ஜனநாயக முன்னேற்ற ஆசாத் கட்சி, ஆம் ஆத்மி, பகுஜன் சாம்ஜ் உள்ளிட்ட கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன. மேலும் காங்கிரஸ் கட்சி, பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி, சிபிஎம், பாந்தரஸ் ஆகிய கட்சிகள் ஒரு கூட்டணியாகப் போட்டியிடுகின்றன. இதனையடுத்து தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்திருந்தன. அதன் தொடர்ச்சியாக ஜம்மு காஷ்மீரில் உள்ள 24 சட்டமன்றத் தொகுதிகளுக்கு (காஷ்மீரில் 16 தொகுதிகள் மற்றும் ஜம்முவில் 8 தொகுதிகளுக்கு) முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 18ஆம் தேதி (18.09.2024) நடைபெற்று முடிந்தது.

Phase 2 Voting Begins in Jammu and Kashmir

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலின் இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (25.09.2024) காலை 7 மணி முதல் தொடங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் 6 மாவட்டங்களில் உள்ள 26 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் இந்த வாக்குப்பதிவில் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா உட்பட 239 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் சுமார் 25 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இதனையொட்டி வாக்காளர்கள் வரிசையாக நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீசார், ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவத்தினர்  தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 10 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதால்  ஜம்மு காஷ்மீர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  ஜம்மு காஷ்மீரில் அரசியலமைப்பின் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு நடைபெறும் முதல் சட்டமன்றத் தேர்தல் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்