Skip to main content

பேரறிவாளன் விடுதலை... உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published on 18/05/2022 | Edited on 18/05/2022

 

 Perarivalan released ... Supreme Court orders action!

 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும், பேரறிவாளன் தன்னை விடுவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் அவரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும், பேரறிவாளன் தன்னை விடுவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜரான மத்திய மற்றும் மாநில அரசுகளின் தலைமை வழக்கறிஞர்கள் காரசார வாதங்களை முன் வைத்தனர்.

 

இதனிடையே, பேரறிவாளன் வழக்கு தொடர்பாக, தமிழக அரசு சார்பில் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்தது. அதில், " பேரறிவாளனை விடுதலை செய்வதற்கான உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும். ஆளுநரின் சிறப்பு அதிகாரமான 161-ன் கீழ் முடிவெடுக்க எந்த தடையும் இல்லை. பேரறிவாளன் வழக்கில் விசாரணை வரம்பு தமிழக எல்லையில் உள்ளதால் முடிவெடுக்க வேண்டிய அதிகாரமும் மாநில அரசுக்கே உள்ளது" எனக் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. அமைச்சரவையின் தீர்மானம் மீது ஆளுநர் முடிவெடுக்காதது பற்றி நீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை கடந்த வாரம் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்நிலையில் இன்று காலை பேரறிவாளன் வழக்கில் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா  ஆகியோர் முன்னிலையில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

 

இதில், ஆளுநர் முடிவெடுக்காமல் தாமதப்படுத்தியது தவறு எனக் கருத்து தெரிவித்த நீதிபதிகள் பேரறிவாளனை 142 சட்டப்பிரிவை பயன்படுத்தி  விடுதலை செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதனால் 30 ஆண்டு காலமாக சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்