குஜராத்தை சேர்ந்த 9 விவசாயிகள் மீது 1.05 கோடி நஷ்டஈடு கேட்டு பெப்சி நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
பெப்சி நிறுவனம் தயாரித்து வரும் "லேஸ் சிப்ஸ்" தயாரிப்பிற்காக பிரத்தியேக உருளைக்கிழங்கு வகையை பயன்படுத்தி வருகிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு பெப்சி நிறுவனம் எப்.எல் 2027 என்ற புது வகை உருளைக்கிழங்கை கண்டறிந்து அதற்கு காப்புரிமை பெற்றது. அதன் பின் லேஸ் சிப்ஸுக்காக இந்த வகை உருளைக்கிழங்கை உற்பத்தி செய்ய சில விவசாயிகளுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது.
இந்நிலையில் இந்த வகை உருளைக்கிழங்கின் விதைகளை ஒரு சில விவசாயிகள் காப்புரிமை பற்றி அறியாமல் பயிரிட்டுள்ளனர். இதன் காரணமாக பெப்சி நிறுவனம் இதனை பயிரிட்ட விவசாயிகள் மீது நஷ்டஈடு கேட்டு வழக்கு பதிவு செய்துள்ளது.
இது பற்றி அங்குள்ள விவசாயிகள் கூறியபோது, "விவசாயம் செய்யும் நாங்கள் எங்களுக்கு கிடைக்கும் விதைகளை பயிரிடுகிறோம். அந்த வகையில் தான் இந்த விதைகளை பயன்படுத்தி பயிரிட்டோம். இது பற்றி தகவல் அறிந்த பெப்சி நிறுவனம் தனியார் துப்பறியும் நிபுணர்களை கொண்டு எங்களுக்கு தெரியாமல் தோட்டத்திலிருந்து மாதிரிகளை சேகரித்து சென்றுள்ளது" என கூறினார். உருளைக்கிழங்கை பயிரிட்டதால் வழக்கு தொடரப்பட்டுள்ள இந்த விவசாயிகள் பெரும்பாலும் 3 முதல் 4 ஏக்கர் நிலங்களை கொண்டவர்களாகவே இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.