
ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் கடனுக்காகத் தான் பெற்ற மகள்களையே ஏலம் விட வைக்கும் சம்பவம் நடந்துள்ளது.
கடந்த வியாழன் அன்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் ராஜஸ்தான் அரசுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் ராஜஸ்தான் மாநிலத்தில் பெருவாரியான மாவட்டங்களில் பெண் குழந்தைகளை ஏலம் விடும் சம்பவங்கள் நிகழ்வதாக அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ராஜஸ்தான் மாநில ஊடகங்கள் கருத்துப்படி, பில்வாரா மாவட்டத்தில் மக்களுக்குள் ஏதேனும் பிரச்சனை நேர்ந்தால் அப்பகுதியில் உள்ள சமுதாய அமைப்புகள் முன்வந்து, பிரச்சனை காவல்துறைக்குச் செல்லாமல் தங்களுக்குள்ளாகவே தீர்த்துக் கொள்வது வழக்கம்.
அதே சமுதாய அமைப்புகள், ஒரு குடும்பத்தில் யாரேனும் கடன் வாங்கி அதைத் திருப்பி கொடுக்க முடியாவிட்டால் அக்குடும்பத்தின் பெண் பிள்ளைகளை விற்பனை செய்ய வற்புறுத்துவதும் அவ்வாறு இல்லையெனில் குழந்தைகளின் தாய் வன்கொடுமை செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்து வந்துள்ளது.
ஊடகங்களின் கருத்துப்படி, அங்குள்ள ஒரு சமுதாய அமைப்பு, ஒரு நபர் பெற்ற 15 லட்சம் கடனுக்காக அவரது தங்கை மற்றும் அவரின் 12 வயது மகளையும் வற்புறுத்தி விற்பனை செய்ய வைத்துள்ளது. அதே போல் 6 லட்சம் கடனுக்காக ஒரு பெண் குழந்தை விற்பனை செய்யப்பட்டுள்ளார். அவரை ஆக்ராவிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவர் மீண்டும் வேறு வேறு நபர்களிடம் மாறி மாறி விற்பனை செய்யப்பட்டதும் நான்கு முறை கர்ப்பமானதும் பின்னர் தெரியவந்தது.
தேசிய மனித உரிமைகள் ஆணையம் இது குறித்தான அறிக்கையை ராஜஸ்தான் மாநிலத் தலைமைச் செயலருக்கு அனுப்பி நான்கு வாரங்களுக்குள் இத்தகைய கொடூரமான சம்பவங்கள் தடுக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.