
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திவரும் சோதனைக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் அமைச்சர்கள் மீது கடந்த சில மாதங்களாக வருமானவரித்துறை போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் இன்று காலை முதல் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருகிறார்கள். அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில், 2016ம் ஆண்டு 6 கோடியே 41 லட்சம் ரூபாய் சொத்து மதிப்பைக் காட்டியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல 2021ஆம் ஆண்டில் சொத்து மதிப்பாக 58 கோடி ரூபாயைக் காட்டியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அவரது மனைவி, மகள் பேரிலும் சொத்துக்கள் வாங்கியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, புதுக்கோட்டை என அவருக்குச் சொந்தமான 43 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த சோதனைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதில், " அலைகடல் ஓய்வதுமில்லை, அதிமுக சாய்வதுமில்லை, இந்த மாதிரியான எந்த அச்சுறுத்தல்களில் இருந்தும் அதிமுக மீளும்" என்று தெரிவித்துள்ளனர்.