தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடும் சூழலில் பொதுமக்கள் தண்ணீரைத் திருடி பயன்படுத்த வேண்டிய அவலநிலை அரங்கேறி வருகிறது.
![lock](http://image.nakkheeran.in/cdn/farfuture/WITS6xOcBRm_vUbL9SjIDK0zR4caBaQj4_-aU4r5aBg/1533347630/sites/default/files/inline-images/Lock.jpg)
45 டிகிரிக்கும் மேல் கோடைவெயில் வாட்டிவதைக்கும் வேளையில், தண்ணீர்ப் பஞ்சம் பல மாதங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே, இமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதிப்படுவதாக செய்திகள் பரவும் நிலையில், ராஜஸ்தான் மக்கள் தண்ணீரை பூட்டு போட்டு பாதுகாக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் பரஸ்ராமபுரா எனும் கிராமத்தில்தான் இந்தக் கொடுமை அரங்கேறியுள்ளது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கடந்த சில மாதங்களாக தண்ணீர்ப்பஞ்சத்தில் சிக்கித் தவிக்கின்றனர். அருகில் உள்ள ஆலை குறிப்பிட்ட தினங்களுக்கு ஒருமுறை வழங்கும் தண்ணீர் மட்டுமே, இம்மக்களுக்கு உயிர் ஆதாரமாக இருந்துள்ளது. அவற்றை டேங்குகளில் நிரப்பி வைத்தால், இரவு நேரங்களில் திருடுபோவதும் அரங்கேறியுள்ளது.
![lock](http://image.nakkheeran.in/cdn/farfuture/ufgyMNTHuzYZwcDnA9LrDPVIxtp7A58Xnma9WKkRz04/1533347660/sites/default/files/inline-images/lock1.jpg)
தங்கம், வெள்ளியைப் போல தண்ணீரையும் பத்திரமாகக் காக்கவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. பஞ்சாயத்து அறிவுரையின்படி எல்லோரும் தங்கள் வீட்டு டேங்குகளை பூட்டு போட்டு பாதுகாக்கின்றனர் என இந்த கிராமவாசி ஒருவர் தங்களது பரிதாபகரமான நிலையை விளக்கியுள்ளார்.