நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலோடு ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. இதில் 60 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட அருணாச்சலப் பிரதேசத்தில் பாஜக ஆளும் கட்சியாக இருந்து வந்தது. தேர்தல் களத்தில் பாஜக, காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் களத்தில் இருந்தன. 60 சட்டமன்றத் தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 31 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
இத்தகைய சூழலில் தான் முதல்வர் பெமா காண்டு உட்பட 10 பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதனால் மீதமுள்ள 50 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து அருணாச்சலப் பிரதேசத்தில் ஏற்கனவே வெற்றிபெற்ற 10 தொகுதிகளையும் சேர்த்து 46 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. தேசிய மக்கள் கட்சி 5 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் (என்.சி.பி.) 3 தொகுதிகளிலும், அருணாச்சல மக்கள் கட்சி 2 தொகுதிகளிலும், காங்கிரஸ் 1 தொகுதிகளிலும், சுயேட்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில் அருணாச்சல பிரதேசத்தின் முதலமைச்சராக பாஜகவைச் சேர்ந்த பெமா காண்டு 3 வது முறையாக இன்று (13.06.2024) பதவியேற்றார். அதன்படி பெமா காண்டுவுக்கு அம்மாநில ஆளுநர் பர்நாயக் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பெமா காண்டுவுடன் 11 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இதில் அருணாச்சல பிரதேசத்தின் துணை முதல்வராக சௌனா மெய்ன் பதவியேற்றுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.