2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையிலான குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.
சுமார் 7 மணி நேரம் நடந்த விவாதத்திற்கு பிறகு மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று அறிமுகம் செய்தார்.
அப்போது பேசிய ப.சிதம்பரம், "சட்டத்திற்கு புறம்பானது என்று தெரிந்தும் இந்த சட்டத்தை நிறைவேற்ற நினைப்பது மோசமான செயல். தற்போது உள்ளவர்களில் எப்படி இஸ்லாமியர்களளையும் பிற மதத்தினரையும் சரியாக அடையாளம் காண்பீர்கள். மேலும் இலங்கை இந்துக்களையும், பூட்டான் இந்துக்களையும் சேர்க்காதது ஏன் ? அனைவரையும் சமமாக பார்க்க வேண்டும். கிறிஸ்தவர்களை சேர்த்துவிட்டு இஸ்லாமியர்களை நீக்கியது ஏன்? இந்த கேள்விகளுக்கு பொறுப்பேற்று பதில் சொல்லப்போவது யார், நன்மை தீமைகளுக்கு பொறுப்பாளி யார்?" என கேள்வியெழுப்பி உள்ளார்.