மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அண்மையில் கேபிள் மற்றும் டிடிஹெச் சேவை கட்டணம் குறித்து புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதில், வாடிக்கையாளர்கள் 100 இலவச சேனல்களையோ அல்லது கட்டண சேனல்களையோ ரூ. 153 செலுத்தி தேர்வு செய்துகொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இது பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருமெனவும் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது கட்டண சேனல்கள் தொடர்பாக டிராய் வகுத்துள்ள புதிய விதிமுறைகளை செயல்படுத்துவதற்கு மார்ச் 31-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
சில தினங்களுக்கு முன்பாக பேசிய டிராய் தலைவர் ஷர்மா, “மொத்தமாக உள்ள 17 கோடி கேபிள் டிவி வாடிக்கையாளர்களில் இதுவரை 9 கோடி பேர் டிராயின் புதிய விதிமுறைக்கு மாறியிருக்கிறார்கள்” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்போது பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்த புதிய விதிமுறைகளை குறித்து டிராய், கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் மற்றும் டிடிஹெச் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தியது. அப்போது கேபிள் டிவி சந்தாதாரர்களில் பலர் புதிய விதிமுறைக்கு மாறாதது தெரியவரவே, சந்தாதாரர்கள் தற்போது வழங்கும் பணத்துக்கு சமமான வகையில் ஒரு திட்டத்தை வகுக்க கேபிள் டிவி நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி புதிய விதிமுறைகளை செயல்படுத்துவதற்கான கால அவகாசத்தையும் மார்ச் 31-ம் தேதிவரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.