அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி எம்.பி., 'இந்திய ஒற்றுமை' என்கிற பெயரில் நடைப்பயணத்தை, தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கி பல்வேறு மாநிலங்கள் வழியாக ஜம்மு- காஷ்மீர் வரை மேற்கொள்கிறார்.
அந்த வகையில், தெலங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தில் 56வது நாள் இந்திய ஒற்றுமைப் பயணத்தை ராகுல் காந்தி தொடங்கினார். அவருடன் இணைந்து ம.தி.மு.க.வின் தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ சுமார் இரண்டரை மணி நேரம் நடைப்பயணம் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து, ராகுல் காந்தியுடன் இணைந்து காலை உணவை அருந்தினார்.
"இந்த சந்திப்பின் போது ராகுல் காந்தி, தமிழக அரசியல் நிலவரம், தேசிய அரசியல் குறித்து பேசினார். பா.ஜ.க.வுக்கு எதிராக முன்னெடுக்கும் நடவடிக்கை குறித்தும் உலகம் முழுவதும் இடதுசாரி, வலதுசாரி அரசியல் நடவடிக்கை குறித்தும் பேசினார். தந்தையின் உடல்நலம் குறித்து விசாரித்தார்" என்று துரை வைகோ தெரிவித்தார்.
ராகுல் காந்தி மற்றும் துரை வைகோ சந்திப்பின் புகைப்படங்கள் ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
முன்னதாக, ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் இணைந்த நடிகை பூஜா பட்டை துரை வைகோவுக்கு ராகுல் காந்தி அறிமுகம் செய்து வைத்தார். பின்னர், இருவரும் கைக்குலுக்கிக் கொண்டனர்.