உலகின் மற்ற நாடுகளில் தயாரிக்கப்பட்ட மருந்துகள், தடுப்பூசிகள் ஆகியவற்றுக்கு இந்தியாவில் ஒப்புதல் பெற வேண்டுமானால், அந்த மருந்துகளையோ, தடுப்பூசிகளையோ கொண்டு இந்தியாவில் மக்களுக்கு பரிசோதனை நடத்தப்படவேண்டும் என்பது விதியாகும். ஆனால், கரோனா தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் தட்டுப்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்த விதியிலிருந்து கரோனா தடுப்பூசிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது.
அதாவது, சில குறிப்பிட்ட நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளுக்கு முதலில் ஒப்புதல் வழங்கப்படும் என்றும், அதன்பிறகு இந்தியாவில் சோதனை நடத்தினால் போதும் என்றும் மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், கரோனா தடுப்பூசிக்கான தட்டுப்பாடு இந்தியாவில் தீராததையடுத்து, வெளிநாட்டுத் தடுப்பூசிகளை விரைவாக இந்தியாவில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் வகையில், குறிப்பிட்ட நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளுக்கும், உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ள வெளிநாட்டுத் தடுப்பூசிகளுக்கும் ஒப்புதலுக்குப் பின்னரான சோதனையிலிருந்தும் மத்திய அரசு விலக்களித்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை இந்தியாவின் மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டாளர் (டி.சி.ஜி.ஐ) அலுவலகம் வெளியிட்டுள்ளது. மேலும், வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் தடுப்பூசியின் ஒவ்வொரு பேட்ச்சும் பரிசோதிக்கப்பட்டு வந்த நிலையில், அதிலிருந்தும் தற்போது விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள், எவ்வித சோதனைகளுமின்றி இந்தியாவில் பயன்பாட்டிற்கு வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, ஃபைசர் நிறுவனம், இந்தியாவில் தடுப்பூசி சோதனையை நடத்துவதிலிருந்து விலக்கு கேட்டு வருவதாகத் தகவல் வெளியானது இங்கே கவனிக்கத்தக்கது.