உலகத்தை அச்சுறுத்தியம் கரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 64 ஆயிரத்தைக் கடந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தி தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்திய போதிலும், கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பது மத்திய, மாநில அரசுகளுக்குச் சவாலாக உள்ளது. இதற்கிடையில் மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, ஊரடங்கில் தளர்வுகளைப் படிப்படியாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன.
இந்நிலையில் மே 12- ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் சிறப்புப் பயணிகள் ரயில் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. முதல் கட்டமாக டெல்லி , சென்னை உட்பட 15 முக்கியமான நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. நாளை மாலை 4 மணி முதல் ஐ.ஆர்.சி.டி.சி. இணையத்தளம் மூலம் முன்பதிவு நடைபெறும் என்றும், முன்பதிவு டிக்கெட் உள்ளவர்கள் மட்டும் ரயில்நிலையத்தில் அனுமதிக்கப்படுவர் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு ரயில்களில் முகக் கவசம் அணிந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.