மேற்கு வங்க அமைச்சர் மற்றும் அவரது உதவியாளரை ஆக.3- ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறையினருக்கு கொல்கத்தா நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஆசிரியர் பணி நியமனம் மோசடி தொடர்பாக, மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அவரது உதவியாளர் அர்பிதா முகர்ஜி ஆகியோர் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.
அதில், ரூபாய் 21 கோடி ரொக்கம் மற்றும் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள், அர்பிதா முகர்ஜி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனர். இதனிடையே, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பார்த்தா சாட்டர்ஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதனையடுத்து, இருவரையும் 14 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை கொல்கத்தா நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தது. அதனை விசாரித்த நீதிமன்றம், பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அர்பிதா முகர்ஜி ஆகியோரை வருகிற ஆகஸ்ட் 3- ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்தது.
48 மணி நேரத்திற்கு ஒருமுறை இருவரையும் மருத்துவ பரிசோதனை செய்யவும், நீதிமன்றம் உத்தரவிட்டது.