இந்தாண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கித் தங்களது ஆதரவைப் பெருக்கி வருகின்றனர்.
அந்த வகையில், பீகார் மாநிலம் பாட்னாவில் இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் தேதி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து, பெங்களூர், மும்பை என அடுத்தடுத்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இந்தியா கூட்டணியின் 4வது ஆலோசனைக் கூட்டம் கடந்த டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது.
இந்நிலையில், இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று (13-01-24) காணொளி வாயிலாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் தலைவர் தேர்வு செய்வது, பரப்புரையைத் தொடங்குவது, தொகுதி பங்கீடு, ராகுல் காந்தி மேற்கொள்ள உள்ள பாரத் ஜோடோ நீதி யாத்திரையில் பங்கேற்பது மற்றும் தேர்தல் பணியை தொடங்குவது தொடர்பான இதர விவகாரங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. காணொளி வாயிலாக நடைபெறும் இந்தக் கூட்டத்தில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் முக்கிய தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி எம்.பி., மல்லிகார்ஜூன கார்கே, சீத்தாராம் யெஞ்சூரி, திமுக சார்பில் அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் சரத் பவார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஒமர் அப்துல்லா ஆகியோர் காணொளிக் காட்சி மூலம் கலந்துகொண்டனர். எனினு, மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? என்று உத்தவ் தாக்கரே விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, “இது சம்பந்தமாக எந்த தவறான புரிதலும் கேட்கக்கூடாது. நான் ஒரு திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால், ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இது போன்ற ஒரு சூழ்நிலையில், கூட்டத்தில் கலந்துகொள்வது கடினமாக இருக்கும். கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்பது குறித்து ஏற்கெனவே தெரிவித்துவிட்டேன்” என்று கூறினார்.