கரோனா நெருக்கடிகளால் கடந்த 2 வருடமாக வெளிநாடுகளுக்கு செல்லாமல் இருந்த எம்.பி.க்கள் குழுவை அடுத்த வாரம் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்க ஒன்றிய அரசு முடிவு செய்திருக்கிறது. முதல் குழு, நாடாளுமன்ற சபாநாயகர் தலைமையில் செல்கிறது.
வெளிநாடுகளில் உள்ள உள்கட்டமைப்பு, சாலைகள் வசதி, கழிவு நீரகற்றல், நீர் மேலாண்மை, போக்குவரத்து திட்டங்கள், சுகாதார கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு விசயங்களை ஆராய்ந்து வருவதற்காக நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும். ஒன்றிய அரசு இந்த குழுக்களை அனுப்பி வைக்கும்.
வெளிநாடுகளுக்குச் செல்லும் எம்.பி.க்கள், அங்கு செயல்படுத்தப்படும் திட்டங்களை இந்தியாவில் அமல்படுத்தும் வகையில் ஒன்றிய அரசுக்கு அறிக்கை சமர்பிப்பார்கள். ஆனால், கரோனா நெருக்கடிகளால் வெளிநாடுகளுக்கு செல்லும் எம்.பி.க்கள் குழுவை நிறுத்தி வைத்திருந்த நிலையில், தற்போது அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில், நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில், 6 எம்.பி.க்கள் கொண்ட குழுவை அடுத்த வாரம் அரபு நாடான துபாய்க்கு அனுப்பி வைக்கிறது ஒன்றிய அரசு.
இந்த எம்.பி.க்கள் குழுவில், பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுசில்குமார் மோடி, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் ராஜ்யசபா எம்.பி. சுரேஷ் ரெட்டி, தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரசின் லோக்சபா எம்.பி. டாக்டர் விஷ்ணு பிரசாத், அதிமுகவின் லோக்சபா எம்.பி. ரவீந்திரநாத், பாஜக லோக்சபா எம்.பி.க்கள் சங்கர்லால்வாணி, சுஜய் ராதாகிருஷ்ணா விகேபாட்டில் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஆறு எம்.பி.க்கள் தவிர, லோக்சபாவின் செக்ரட்டரி ஜெனரல் உத்பால்குமார் சிங், இணைச் செயலாளர் அஜய்குமார், லோக்சபா செயலகத்தின் இயக்குநர் லால்கிதாங்க், சபாநாயகரின் சிறப்பு அதிகாரி ராஜீவ் தத்தா உள்ளிட்ட 7 அதிகாரிகளும் இந்த குழுவோடு துபாய் செல்கின்றனர். இந்த துபாய் பயணத்தில் பங்கேற்க காங்கிரஸ் எம்.பி.க்களில் ஒருவரை தெரிவியுங்கள் என்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியிடம் ஒன்றிய அரசு கடிதம் மூலம் கேட்டபோது, தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் விஷ்ணுபிரசாத்தின் பெயரை சோனியா காந்தி தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.