மக்களவையில் "முத்தலாக் தடை மசோதா" ஏற்கனவே நிறைவேறிய நிலையில், மாநிலங்களவையில் இன்று முத்தலாக் தடை மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். இந்த மசோதா மீதான விவாதம் இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த மசோதாவுக்கு அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் 'முத்தலாக் தடை மசோதா' மீதான வாக்கெடுப்பு மாலை 06.00 மணிக்கு தொடங்கியது. இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு "வாக்கெடுப்பு சீட்டு" முறையில் நடைபெற்றது. இதில் மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப 84 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், 99 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் 29 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த வாக்கெடுப்பில் தெலுங்கு தேசம், டி.ஆர்.எஸ், பி.எஸ்.பி கட்சிகளின் எம்.பிக்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இருப்பினும் வாக்கெடுப்பின் முடிவில் மசோதாவிற்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு அளித்ததால் முத்தலாக் தடை மசோதா நிறைவேறியதாக மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு அறிவித்தார். அதனை தொடர்ந்து முத்தலாக் மசோதா குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். பிறகு குடியரசுத்தலைவரின் ஒப்புதல் கிடைத்தவுடன், முத்தலாக் தடை சட்டம் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதன் மூலம் மத்திய அரசு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பாஜக அரசுக்கு உறுப்பினர்களின் ஆதரவு அதிகரித்துள்ளது என்பதை நிரூபித்துள்ளது.
இந்நிலையில் "முத்தலாக் தடை சட்ட மசோதா" மீதான வாக்கெடுப்பில் அதிமுக வெளிநடப்பு செய்ததை திமுகவின் கனிமொழி எம்.பி விமர்சித்துள்ளார். இது குறித்து கனிமொழி எம்.பி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில் "முத்தலாக் மசோதா வெற்றி பெறுவதற்கு வசதியாக ராஜ்ய சபாவில் அதிமுக வெளிநடப்பு செய்தது வெட்கக்கேடானது" என குறிப்பிட்டுள்ளார்.