இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்ட அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்குத் துறைசார்ந்த அமைச்சர்கள் வாய்மொழியாகவோ அல்லது எழுத்துப் பூர்வமாகவோ பதிலளித்து வருகின்றனர். அதேபோல், பல்வேறு மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டு வருகிறது.
அந்த வகையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று (18/03/2021) காப்பீட்டுத் துறையில், அந்நிய முதலீடு உச்சவரம்பை 49% -லிருந்து 74% ஆக அதிகரிக்க வகை செய்யும் மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவை நாடாளுமன்ற சிறப்புக் குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இருப்பினும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையில் மசோதா ஒப்புதலைப் பெற்றது.
அதேபோல், புதுச்சேரி மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்த நிலையில், மக்களவையில் ஒப்புதலைப் பெற்றது. இதன் மூலம் ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான புதுச்சேரி அரசின் செலவுகளுக்கு சிக்கலின்றி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களிலும் ஆளுநர் ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.