மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி வரும் விவசாயிகளின் போராட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (11-ந் தேதி) பேசிய ராகுல் காந்தி, "விவசாயிகளின் போராட்டத்தில் இதுவரை 200 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். ஆனால், அவர்களுக்காக இந்த அரசு, அஞ்சலி கூட செலுத்தவில்லை. அந்த விவசாயிகளுக்காக 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துவோம்" என்று கேட்டுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ், தி.மு..க, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர். இந்த விவகாரம் லோக்சபாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சபாநாயகரின் அனுமதி பெறாமல் நடந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சி அது. நாடாளுமன்ற வரலாற்றில் அனுமதி பெறாமல் மவுன அஞ்சலி இதுவரை நடந்ததில்லை.
இந்த நிலையில், 'ராகுல் காந்தியின் இத்தகைய செயல் இந்தச் சபையை அவமதிப்பதாகும். அவர் நடந்துகொண்டது அவை விதிகளுக்கு முரணானது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று சொல்லி, ராகுலுக்கு எதிராக உரிமை மீறல் பிரச்சனையை பா.ஜ.க. எம்.பி.க்கள் ராகேஷ்சிங், பி.பி.சவுத்ரி, சஞ்சய் ஜெய்ஸ்வால் ஆகியோர் எழுப்பியதோடு, சபாநாயகரிடம் முறைப்படி கடிதமும் கொடுத்துள்ளனர்.
தற்போது லோக்சபா கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த உரிமை மீறல் விவகாரம், கூட்டத் தொடரின் அடுத்த அமர்வில் ராகுலுக்குத் தண்டனை பெற்றுத் தர வாய்ப்பிருக்கிறது என்கிறது டெல்லி தகவல்.