திரிபுரா மாநில முதல்வர் பிப்லாப் குமார் தேப், அம்மாநில தலைநகர் அகர்தலாவில் பாஜக கட்சித் தொண்டர்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் அண்டை நாடுகள் குறித்து தெரிவித்த கருத்து, சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
முதல்வர் பிப்லாப் குமார் தேப், இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் இலங்கையில் பாஜக ஆட்சியில் அமர வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்ததாகப் பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர், "உள்துறை அமைச்சர் நமது கட்சித் தலைவராக இருந்தபோது, நாங்கள் திரிபுரா அரசின் விருந்தினர் மாளிகையில் சந்தித்துக்கொண்டோம். அப்போது எங்களில் ஒருவர், அஜய் ஜாம்வால் (வடகிழக்கு மாநில பாஜக பொதுச் செயலாளர்) என நினைக்கிறேன், அவர், இந்தியாவின் பல மாநிலங்களில் பாஜக எவ்வாறு ஆட்சியில் இருக்கிறது எனக் கூறினார். அதற்குப் பதில் கூறிய (அமித்) ஷா, நேபாளமும் இலங்கையும் இன்னும் எஞ்சியுள்ளன. நாம் இன்னும் நமது கட்சியை அங்கு கொண்டுசென்று, அங்கும் வெல்ல வேண்டும் எனத் தெரிவித்தார்" எனக் கூறியுள்ளார்.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஆட்சியமைக்க வேண்டும் என அமித் ஷா கூறியதாக, திரிபுரா முதல்வர் கூறியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.