நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இன்று காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் கூட்டத்தொடரில் ஜீரோ ஹவர், கேள்வி நேரம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக மழைக்கால கூட்டத்தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தொடரில் தடுப்பூசி ஒதுக்கீடு, பெட்ரோல் விலை உயர்வு, விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதேபோல் நேற்று, நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக சார்பில் கலந்து கொண்ட டி.ஆர்.பாலு, தமிழக எம்.பிக்கள் தரப்பில் இருந்து தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது, கர்நாடகா கட்ட முயற்சிக்கும் மேகதாது அணை குறித்த பிரச்சனை மற்றும் தமிழகத்திற்கான கரோனா தடுப்பூசி ஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்த மழைக்கால கூட்டத்தொடரானது மொத்தமாக 19 அமர்வுகளாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில் மத்திய அரசு 31 சட்ட மசோதாக்களை நிறைவேற்ற முடிவு செய்துள்ளது.