கருவறைக்குள் சென்ற அரச குடும்பத்தைச் சேர்ந்த ராணியைச் சாமியார்கள் வெளியே தள்ளியதாகப் பரவும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அண்மையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” எனக் கூறியிருந்தார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு இந்தியா முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசியது திரிக்கப்பட்டுப் பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது என்று முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி என இருவரும் தனித்தனியே அறிக்கை வெளியிட்டிருந்தாலும், இன்னும் சர்ச்சை ஓய்ந்தபாடில்லை.
இந்த நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த இணையவாசிகள், இதுதான் சனாதனம் என்று கூறி வைரல் செய்து வருகின்றனர். மத்தியப் பிரதேச மாநிலம் பன்னாவில் உள்ள கிருஷ்ணர் கோவில் ஜன்மாஷ்டமி கொண்டாட்டத்தின் போது, ஒரு பெண் கருவறைக்குள் ஆரத்தி எடுக்க முற்பட்டதாகத் தெரிகிறது. அப்போது அந்தப் பெண்ணை அங்கிருந்த சாமியார்கள் அவரைத் தள்ளிவிட்டுத் தரதரவென இழுத்து வெளியே போட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்த நிலையில், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண் பன்னா அரச குடும்பத்தைச் சேர்ந்த ராணி ஜிதேஸ்வரி குமாரி என்றும், அவர் அப்போது மது போதையில் இருந்ததாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. அதேபோல், அவரை இழுத்து வெளியே தள்ளுவதற்கு முன்பாக, ராணி ஜிதேஸ்வரி ரகளையில் ஈடுபட்ட வீடியோ காட்சிகளும் வெளியாகி வருகிறது.