கர்நாடகாவில் தேர்தல் நடக்கவிருக்கிறது, பிரச்சாரம் அனல் பறக்கிறது. இந்த நேரத்தில் இந்திய நாட்டின் பிரதமர் மோடி கன்னட திரைப்பட உலகில் கால் பதிக்கவுள்ளார். இப்படி சொன்னவுடன் மோடி அலை திரைப்படத்திலும் வீசப்போகிறதா, அவர் திரைப்படம் நடிக்கவுள்ளாரா, கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் இதுவும் ஒரு யுக்தியா என்றெல்லாம் என்று ஆயிரம் கேள்விகளை நீங்கள் வீச நினைப்பதற்குள் நாங்களே அதற்கான விடையை சொல்கிறோம். அது மோடி நடிக்கும் படமல்ல, மோடி பற்றிய படம். மோடி கருப்புப்பணத்தை ஒழிப்பதாகக் கூறி ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தடை செய்து 120 கோடி மக்களையும் ஏ.டி.எம் வாசலில் நிற்க வைத்தார். இந்த முயற்சியால் சில கருப்பாடுகளின் பணம் மட்டும் வெளியே வந்தது. இந்த நிகழ்வைத்தான் கன்னடத்தில் படமாக்கப்போகிறார்கள். படத்தின் தலைப்பு "ஸ்டேட்மென்ட் 8/11". இதில் மோடியின் கதாபாத்திரத்தில் நடிப்பவர் யார் என்ற ஆர்வமும் இருக்கும்.

மோடியின் கதாபாத்திரத்தில் நடிப்பவர் கேரளாவைச் சேர்ந்த 64 வயது நிரம்பிய ராமச்சந்திரன். இவரை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது சமூக வலைத்தளங்கள்தான். சென்றாண்டு ஜூலை மாதம் கேரளாவில் உள்ள பையனூர் இரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ராமச்சந்திரனை பெங்களூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் புகைப்படம் எடுத்தார். பிரதமர் நரேந்திர மோடி போலவே இருக்கிறார் என்று அந்தப் புகைப்படத்தை எடுத்து பதிவிட அது வைரல் ஆனது. அந்தப் புகைப்படத்தில் ராமச்சந்திரன் கண்ணாடி போட்டுக் கொண்டு தோளில் ஒரு பேக்குடன், ஜீன்ஸ், டிஷர்ட் அணிந்து மொபைலை பார்த்துக் கொண்டிருந்தார். சமூகவலைத்தளங்கள் மூலம் இவர் மிகவும் பிரபலம் அடைய, பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகள் அவர் வீட்டுக் கதவைத் தட்டினார்கள். 'என்னடா இது தொல்லையாகப் போச்சு' என்றெண்ணிய ராமச்சந்திரன், முகத்தை க்ளீன்-ஷேவ் பண்ணிவிட்டு தன் சொந்த கிராமத்துக்குப் போய்விட்டார்.
எப்படி ஒளிந்தாலும் விடாமல் தேடிப்பிடித்து படத்தில் நடிக்க வைத்துவிட்டார்கள் கன்னடிகாஸ். இந்தப் படத்தில் நடிப்பது குறித்து ராமச்சந்திரன் "நான் சுருக்கெழுத்தாளராக 30 ஆண்டுகள் பணியாற்றி, பின்னர் 51 வது வயதில் விருப்ப ஓய்வு பெற்றேன். இயக்குனர் அப்பி பிரசாத் என்னிடம் வந்து கதை கூறினார். நான் மோடியின் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். அதனால்தான் நடிக்க ஒப்புக்கொண்டேன். இந்தத் தோற்றத்தினால் பலர் என்னை அரசியல் பிரச்சாரம் செய்யவெல்லாம் அழைத்தார்கள், நான் மறுத்துவிட்டேன். ஏனென்றால் நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவன் அல்ல. மோடியின் மீது வைத்திருந்த மரியாதையினால்தான் படத்திலேயே நடிக்கிறேன்" என்று கூறினார்.
தனது பிம்பம் பற்றி மிகத் தீவிரமான கவனம் கொண்டவர் பிரதமர். இப்படி ஒரு படம் எடுப்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பவில்லையா என்று விசாரித்தால்தான் தெரிகிறது, படம் மோடியின் ஆட்சியை விமர்சிப்பது போல இல்லையாம். பணமதிப்புநீக்க நடவடிக்கையை ஆதரித்துப் பேசுகிறதாம். எனினும் படம் வெளிவந்தால்தான் உண்மை தெரியும். தன்னைப் போலவே இருக்கும் ராமச்சந்திரனை இன்னும் பிரதமர் மோடி பார்க்கவில்லை போல. பார்த்தால், 'நீ இந்தியாவைப் பார்த்துக்கொள் நான் மற்ற நாடுகளுக்கு சென்றுவிட்டு வருகிறேன்' என்று சொல்லிவிட்டுச் சென்றாலும் சென்றுவிடுவார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீசாகிவிட்டது. கூடிய விரைவில் மீண்டும் திரையில் மீண்டும் ஒரு டீமானிடைசேஷனைப் பார்க்கலாம்.