மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டை இன்று காலை மக்களவையில் நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தாக்கல் செய்தார். இந்த இடைக்கால பட்ஜெட் குறித்து ட்விட்டரில் கருத்துகளை தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம், “மோடி அரசு ஜிடிபி-ஐ உயர்த்தியுள்ளதாக தெரிவிக்கிறது. ஆனால், அதேசமயம் நாட்டின் வேலையின்மையும் உயர்ந்துள்ளதை கவனிக்கவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆண்டில்தான் பிரதமர் மோடியின் ஆட்சியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.2% இருந்தது என அரசு கூறுகிறது. அதனால், மற்றொருமுறை பணமதிப்பிழப்பு நடவடிக்கை வரப்போகிறது, அதில் ரூ. 100 நோட்டைச் செல்லாது என அறிவிக்கப்போகிறார்கள்.
வேலை வாய்ப்பு உருவாக்கம் இல்லாமல், ஒரு நாடு ஆண்டுக்கு சராசரியாக 7% வளர்ச்சி எப்படி சாத்தியமாக முடியும். 45 ஆண்டுகளில் இல்லாத அளவு வேலையின்மை அதிகமாக இருக்கிறது. பின் எப்படி நாட்டின் பொருளாதாரம் 7% வளர்ந்துவிட்டது என்று நாம் நம்ப முடியும். பாஜக அரசு தாக்கல் செய்தது இடைக்கால பட்ஜெட் அல்ல, வாக்குகளுக்கான பட்ஜெட்” என்று தெரிவித்துள்ளார்.