புதுச்சேரி மாநிலத்தில் உடனடியாக உடற்பயிற்சி கூடங்கள் திறப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் புதுச்சேரி மாநில அமைப்பாளர் ஸ்ரீதர் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: -
'புதுச்சேரி மாநிலத்தில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக புதுச்சேரி முழுவதும் உள்ள அனைத்து வணிகம், மதுக்கடைகள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்டவை மூடப்பட்டிருந்தன. கடந்த மாதம் முதல் படிப்படியாக வணிகம் உள்ளிட்ட மற்ற துறைகள் அனைத்தையும் திறப்பதற்கு புதுச்சேரி அரசு அனுமதி வழங்கியது. புதுச்சேரி மாநிலத்தில் 80-க்கும் மேற்பட்ட உடற்பயிற்சி கூடங்கள் உள்ளன. இந்த உடற்பயிற்சி கூடங்களை நம்பி 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பிழைத்து வருகின்றன. கரோனா அச்சத்தின் காரணமாக புதுச்சேரி அரசால் உடற்பயிற்சி கூடங்கள் திறக்க இன்றுவரை அனுமதி வழங்காததால் 500-க்கும் மேற்ப ட்ட ஊழியர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
கரோனா ஊரடங்கிலும் பல்வேறு விதிமுறைகளை பின்பற்றி ஐ.டி. உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு புதுச்சேரி அரசு அனுமதி வழங்கியுள்ளது. அவ்வளவு ஏன் மக்களின் பொருளாதாரத்தையும், உடல் நலனையும் பாதிக்க கூடிய மதுபானக்கடைகளைகூட திறக்க அனுமதித்துள்ளது. எனவே புதுவை அரசு உடனடியாக உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி வழங்க வேண்டும். புதுச்சேரியில் நான்கு மாத காலமாக உடற்பயிற்சி கூடங்கள் திறக்காததால் அதை நடத்துகின்ற உரிமையாளர்கள் வாடகை செலுத்த முடியாமல் தவித்து வருகிறார்கள். மேலும் புதுச்சேரியில் உள்ள இளைஞர்கள் உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாத அவல நிலை நிலவுகிறது. மேலும் உடற்பயிற்சி செய்வதால் மன அழுத்தம் குறைக்கப்படுவதோடு சுவாச மண்டலம் மேம்பட்டு நோய் எதிர்ப்பு சக்திக்கு உறுதுணையாக அமைகிறது.
மேலும் இதே நிலைமை நீடித்தால் பெரும்பான்மையான உடற்பயிற்சி கூடங்களை விற்கக்கூடிய அவல நிலை உருவாகும். எனவே புதுச்சேரி அரசு உடனடியாக உடற்பயிற்சி கூடங்களை திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். புதுவை அரசு அனுமதி வழங்காவிட்டால் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் பாதிக்கப்பட்ட உடற்பயிற்சி கூட உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரையும் திரட்டி, அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கின்றோம்" என்றார்.