பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையிலான குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.
மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், எதிர்கட்சியினரும் இந்த மசோதாவுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த புதிய மசோதாவின்படி, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இஸ்லாமியர் அல்லாதவர்கள் ஐந்து ஆண்டுகள் வசித்திருந்தாலே இந்திய குடியுரிமை வழங்கப்படும்.
இந்நிலையில் இந்த மசோதா குறித்து மக்களவையில் பேசிய அசாதுதீன் ஒவைஸி, "நான் உங்களிடம் (சபாநாயகர்) வேண்டுகோள் ஒன்றை விடுக்கின்றேன். இத்தகைய சட்டத்திலிருந்து நாட்டை காப்பாற்றுங்கள் மற்றும் உள்துறை அமைச்சரையும் காப்பாற்றுங்கள். இல்லையெனில் நியூரம்பெர்க் இனம் சட்டங்கள் மற்றும் இஸ்ரேலின் குடியுரிமைச் சட்டம் போன்றவற்றை கொண்டுவந்த ஹிட்லர் மற்றும் டேவிட் பென்-குரியனுடன் உள்துறை அமைச்சரின் பெயரும் இடம்பெறும்" என தெரிவித்தார்.