2020-21-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே துறையின், முக்கியமான 10 வளர்ச்சி திட்டங்களுக்கு வெறும் 10,000 ரூபாய் மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2020-21-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் ரயில்வே வளர்ச்சி பணிகளுக்கான ஒதுக்கீட்டில் தமிழக ரயில்வே துறைக்கு வெறும் 10,000 ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள 17 ரயில்வே மண்டலங்களுக்கு சேர்த்து ரூ.70,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் நடைபெறும் ரூ.12,000 கோடி மதிப்புள்ள 10 திட்டங்களுக்கும் சேர்த்து வெறும் 10,000 ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக அந்த திட்டங்கள் கைவிடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதேநேரம் உத்தரப்பிரதேசத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வடக்கு ரயில்வே-க்கு வளர்ச்சி பணிகளுக்காக ரூ.7,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நிதி ஒதுக்கீடு பல்வேறு தரப்பிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.