இந்தி தினத்தை முன்னிட்டு இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிவிட்ட ஒரு ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது அந்த கருத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஓவைஸி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு, ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உண்டு, ஆனால் ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஒரே மொழி இருப்பது இந்தியாவுக்கான அடையாளமாக இருக்கும், இது உலகளவில் இந்தியாவின் அடையாளமாக மாற வேண்டும். இன்றைய தேதிக்கு, இந்தியாவை ஒருங்கிணைக்க வேண்டுமென்றால், அது பலராலும் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும்” என்று பதிவிட்டார். இது தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அமித்ஷாவின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஓவைஸி, தனது ட்விட்டர் பக்கத்தில், "அனைத்து இந்தியர்களுக்கும் தாய்மொழி இந்தி மொழி அல்ல. இந்த தேசத்தில் உள்ள அனைவரது தாய்மொழிகளையும், பன்முகத்தன்மையையும் அங்கீகரிக்க முயலுங்கள். ஒவ்வொரு இந்தியரும் விரும்பிய தனித்துவமான மொழியை, கலாச்சாரத்தை தேர்வு செய்ய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 29 உரிமை வழங்கியுள்ளது. இந்தி, இந்து, இந்துத்துவாவைக் காட்டிலும் இந்தியா மிகப்பெரியது" எனத் தெரிவித்துள்ளார்.