புதுச்சேரி யூனியன் பிரதேசம் 15வது சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 26ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. சட்டப்பேரவையில் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில் குறிப்பிட்டுள்ள விவரம் வருமாறு, கடந்த ஏப்ரல் 2011 முதல் மார்ச் 2019 வரை போக்குவரத்து துறையின் பரிவர்த்தனைகள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் இதர மாநில நபர்கள் புதுச்சேரியில் வாகனங்களைப் பதிவு செய்திருந்தனர். மேலும் தணிக்கையின்போது ஒரே முகவரியில் ஏராளமான வாகனங்கள் பதிவாகியிருந்தன. கடந்த 2016 - 17 முதல் 2018 - 19 வரை 11,454 வாகனங்கள் பிற மாநிலங்களில் நிரந்தர முகவரி உள்ள நபர்களால் பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது. பதிவை ஆராய்ந்ததில் வெவ்வேறு வாகன உரிமையாளர்கள் பிரமாண பத்திரங்கள் மூலம் ஒரே முகவரியை படிவம் 20இல் தெரிவித்திருந்தது கண்டறியப்பட்டது. ஒரே முகவரியை 8 முதல் 44 வாகன உரிமையாளர்கள் திரும்பத் திரும்ப தெரிவித்ததையும் தணிக்கைத்துறை கண்டறிந்துள்ளது.
இந்த 3 வருட காலத்தில் மிக அதிகமான அதிக மதிப்பு கொண்ட 117 வாகன பதிவுகள் வெறும் 5 முகவரிகளைக் கொண்டிருந்தன. இவர்களின் சொந்த மாநிலங்களில் வாகன வரி விகிதங்கள் அதிகமாக இருந்ததாலும், புதுச்சேரியில் குறைவாக இருந்ததாலும் புதுச்சேரி வாகன பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக பல கோடி மதிப்புள்ள 117 வாகனங்களைப் பதிவுசெய்த உரிமையாளர்கள் புதுச்சேரியில் குறைவான வரிவிதிப்பை பயன்படுத்தி தற்காலிக நடப்பு முகவரியைத் தெரிவிக்கலாம் என்ற விதியைப் பயன்படுத்தி ரூபாய் 40 லட்சம் மட்டுமே வரி செலுத்தி வாகன பதிவு செய்துள்ளனர். சொந்த மாநிலங்களில் இந்த ரூ. 20.49 கோடி மதிப்புள்ள வாகனங்களை இவர்கள் பதிவு செய்திருந்தால் ரூ. 2.42 கோடி வரியாக செலுத்த வேண்டியிருக்கும். தணிக்கைத்துறை கலந்தாய்வு கூட்டத்தில் இதைக் குறிப்பிட்டபோது புதுச்சேரி போக்குவரத்து துறையினர் அதை ஏற்றனர். அப்போது, 'படிவம் 20இல் தரப்படும் முகவரியின் உண்மைத்தன்மை ஒப்பிடப்படுவதில்லை. கடந்த 2018 முதல் வாகன வரியை அதிகரித்துள்ளோம். பல வாகனங்கள் ஒரே முகவரியைத் தெரிவித்த நிகழ்வில் நடவடிக்கை எடுக்கிறோம்' என்று தெரிவித்துள்ளனர் என குறிப்பிடப்பட்டது.
வெளி மாநிலங்களைச் சேர்ந்த நடிகர்கள், பிரபல தொழிலதிபர்கள் தங்கள் கார்களைப் புதுச்சேரியில் பதிவு செய்துவந்தனர். இதனால் அந்த மாநிலங்களுக்கு வரி வருவாய் இழப்பு ஏற்படுவதாக புகார்கள் எழுந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தற்போது மத்திய தணிக்கை அறிக்கை மூலம் அது உறுதியாகியுள்ளது.
இதேபோல் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு தணிக்கை அறிக்கையில் நிதிநிலை தொடர்பான முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. அதில், புதுச்சேரியில் கடந்த 2015 - 16இல் ரூ. 7,754 கோடியாக இருந்த நிலுவை கடன்கள் 2019 - 20இல் ரூபாய் 9,449 கோடியாக அதிகரித்துள்ளது. மொத்த கடனில் 72.51 சதவீதத்தை அடுத்த 7 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்தப்பட வேண்டிய நிலை புதுச்சேரி அரசுக்கு உள்ளது. பல்வேறு பணம் பெற்று வழங்கும் அதிகாரிகளால் பெறப்பட்ட ரூபாய் 114.62 கோடிக்கான 1,456 தற்காலிக முன்பணங்கள் சரிக்கட்டப்படாமல் இருந்தன. அத்துடன் ரூபாய் 15.75 கோடிக்கான 265 தற்காலிக முன்பணம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சரி கட்டப்படாமல் இருந்தன. கடந்த மார்ச் 2020 வரை பல்வேறு அரசு துறைகளில் ரூபாய் 27.88 கோடி அரசு பணம் முறைகேடு, திருட்டு மற்றும் பணக்கையாடல்கள் செய்யப்பட்டுள்ளன. 6 பொதுத்துறை நிறுவனங்கள் ரூ. 28.05 கோடி லாபத்தையும், 6 பொதுத்துறை நிறுவனங்கள் ரூ. 52.37 கோடி நஷ்டத்தையும் அடைந்தன. 12 அரசு நிறுவனங்களில் கணக்குகள் இறுதி செய்யப்படாமல் இருந்தன என தெரிவிக்கப்பட்டது.