தேரா சச்சாவில் பணிபுரிய பிறமாநிலத்தவர்கள் விரும்ப இதுதான் காரணமா?
தனது பக்தைகள் இருவரை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில், தேரா சச்சா சவுதாவின் தலைவர் சர்ச்சைக்குரிய சாமியார் குர்மீத் சிங் குற்றவாளி என பன்ச்குலா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
குர்மீத் சிங்கின் இந்த தேரா சச்சா சவுதா ஆசிரமத்தில் தங்கி பணிபுரிய பிறமாநிலத்தவர்கள் அதிக ஆர்வம் காட்டிவந்தது தெரிய வந்துள்ளது. இதற்கான காரணங்களை அங்கு பணிபுரிந்தவர்கள் சிலர் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளனர்.
பீகார், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவின் பிற மாவட்டங்களைச் சேர்ந்த 2,000 பேர் தேரா சச்சா சவுதாவில் தங்கி பணிபுரிகின்றனர்.
தேரா சச்சா சவுதாவில் ஒருநாளுக்கான வருமானம் ரூ.300 என்றாலும், ஒன்பதாவது மாதத்தில் இருந்து ரூ.9,000 மாத வருமானமாக கூட்டப்படுகிறது. இங்கு தங்குமிடம், உணவு போன்ற எதற்காகவும் தனியாக செலவு செய்யத்தேவையில்லை. வேலை செய்யும் இடத்திற்கே உனவு தேடிவரும்.
குடும்பத்தோடு குடியேற உள்ளே வீடுகள் இருக்கின்றன. தண்ணீர், மின்சாரம் போன்ற கட்டணங்கள் இல்லாமல் மாத வாடகையாக ரூ.1,500 கொடுத்தால் போதும். விடுமுறை எடுத்துக்கொண்டால் வருமானத்தில் பிடித்தம் இல்லாமல், சரியான நேரத்தில் வருமானம் கொடுக்கப்படும்.
இங்கு வேலை செய்பவர்கள் வேலைநேரம் போக மற்ற நேரத்தில் சேவை செய்ய வேண்டும் என்பது மட்டுமே கூடுதல் எதிர்பார்ப்பாக இருந்துள்ளது.
- ச.ப.மதிவாணன்