அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று நீதிபதிகள், “ இன்னும் அயோத்தியில் ராமரின் வம்சாவளிகள் வசித்து வருகிறார்களா?” என்று கேள்வியை எழுப்பினார்கள்.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அரச குடும்பத்தை சேர்ந்தவரும், பாஜகவின் பெண் எம்.பி.யுமான தியா குமாரி, “நான் ராமரின் வம்சாவளி” என்று அறிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து பேசியவர். “ராமரின் வம்சாவளியினர் இன்னும் இருக்கிறார்களா? என்று கோர்ட்டு கேட்டுள்ளது. ராமரின் பரம்பரையை சேர்ந்தவர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். என் குடும்பம், ராமரின் மகன் குஷாவின் பரம்பரையை சேர்ந்தது.
அதற்கான கையெழுத்து பிரதிகள், மரபணு ஆதாரங்கள், ஆவணங்கள், அரச குடும்பத்திடம் உள்ளன. தேவைப்பட்டால், அந்த ஆதாரங்களை கோர்ட்டில் கொடுத்து இதை நிரூபிப்பேன். ஆனால், கோர்ட்டு விசாரணையில் தலையிட மாட்டேன். இந்த வழக்கு விசாரணையை விரைவாக நடத்தி, தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்” என்று கூறியுள்ளார்.