குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக, இன்று (15/06/2022) பிற்பகலில் நடைபெறவுள்ள கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியும் கலந்துக் கொள்ளவுள்ளது.
நாட்டின் புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஜூலை 18- ஆம் தேதி அன்று நடக்கவுள்ளது. இதில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரைக் களமிறக்க விரும்பும் மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அது தொடர்பாக, ஆலோசனை நடத்த காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்டப் பிற எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
அக்கூட்டம் டெல்லியில் நடைபெறவிருந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியும் கலந்துக் கொள்ளவுள்ளது. மல்லிகார்ஜுன கார்கே, ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, ஜெயராம் ரமேஷ் ஆகிய மூத்த காங்கிரஸ் தலைவர்கள், இக்கூட்டத்தில் பங்கேற்பார்கள் எனக் கூறப்படுகிறது.
இக்கூட்டத்தில், தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு கலந்துக் கொள்ளவுள்ளார். மேலும், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளும் பங்கேற்கவுள்ளனர்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் சரத் பவாரை நிறுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனால், தான் போட்டியிடப்போவதில்லை என்று சரத்பவார் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, சரத்பவாரை மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசியுள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரளும் பட்சத்தில் அது வருகிற 2024- ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான மிக முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
இதனிடையே, முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்த கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று ஆம் ஆத்மி, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்டக் கட்சிகள் அறிவித்துள்ளனர்.