நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர், கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடரானது வருகிற டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த விவாதத்தில் ஆளும் பா.ஜ.க எம்.பி.க்களும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் காரசாரமாக விவாதித்து வருகின்றனர். இந்தக் கூட்டத் தொடரில் ஆளுநர் பதவி முற்றிலும் ஒழிக்க வேண்டும். மாநிலங்களவையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளது.
6வது நாளாக நடைபெறும் இந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கேரளாவைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவதாசன் என்பவர், ஆளுநர் பதவி தேவையில்லை என்பது குறித்து தனித்தீர்மானம் கொண்டுவந்தார். இந்த தீர்மானத்தின் மீது பேசிய அவர், ”பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் எச்சமாக இருக்கும் ஆளுநர்கள், மாநிலங்களில் பிரித்தாளும் சூழ்ச்சியை கையாளுகின்றனர். மாநில அரசுகள் கொண்டு வரும் நலத்திட்டங்களுக்கு ஆளுநர்கள் முட்டுக்கட்டை போடுகின்றனர். மாணவர்களின் நலன் கருதி தமிழ்நாட்டின் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாவுக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார். மாநில அரசின் வரிப்பணத்தில் வாழும் ஆளுநர்கள் அதற்கு விசுவாசமாக இருப்பதில்லை” என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய கர்நாடகா மாநில காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹனுமந்தையா, “ஆளும் கட்சியின் ஏஜெண்டாக செயல்படும் ஆளுநர்கள், மாநில அரசுகள் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டுள்ளனர். அவர்கள், ஜனநாயக செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர்” என்று கூறினார்.
இதனையடுத்து பேசிய திமுக எம்.பி.க்கள் சண்முகம், வில்சன், கிரிராஜன் ஆகியோர், தமிழக ஆளுநர் பலமுறை தன் அதிகார வரம்பை மீறி மாநில அரசையும், சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட முடிவுகளையும் விமர்சித்து வருகிறார். மாநில அரசுகள் சட்டப் பேரவையில் நிறைவேற்றுகிற மசோதாக்களை மதிக்காமல் காலில் போட்டு மிதிக்கும் ஆளுநர் பதவியை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்” என்று கூறினார்கள். அதனைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.