இந்த வருடத்திற்கான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 15 அமர்வுகள் நடைபெற உள்ளன. நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்து எதிர்க்கட்சிகள் சார்பில் மணிப்பூரில் இரு பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து உடனே விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இரு அவைகளிலும் இதுகுறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் இரு அவைகளிலும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மீது காங்கிரஸ் கட்சி மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தது. இதையொட்டி மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மான நோட்டீஸை கடந்த 26 ஆம் தேதி அன்று வழங்கியது. இதையடுத்து மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கான நோட்டீஸை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர், இந்த தீர்மானத்தை ஏற்ற சபாநாயகர் விவாதத்துக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தார். அதற்கான விவாதம் இதுவரை நடக்காத நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சில மசோதக்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மணிஷ் திவாரி, தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்தார். அதில் பேசிய அவர், “எதிர்க்கட்சிகள் சார்பில் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் மக்களவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதனால் அதன் பிறகு மற்ற மசோதாக்களையோ,அலுவல்களையோ நிறைவேற்றுவது என்பது முற்றிலும் நாடாளுமன்ற மரபு மற்றும் உரிமையை மீறும் செயலாகும். மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தைத் திட்டமிடுவதற்கான 10 நாள் அவகாசத்தை மசோதாக்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகப் பயன்படுத்த முடியாது.
அதனால், நம்பிக்கையில்லாத் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்ட பிறகு நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் அனைத்தும் அரசியலமைப்பு ரீதியாக சந்தேகத்துக்குரியதாக பார்க்கப்படுகிறது. எனவே, நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு நிறைவேற்றப்பட்ட அனைத்து மசோதாக்களின் தன்மையும், அவை சட்டப்பூர்வமாக நிறைவேற்றப்பட்டதா இல்லையா என்பதை நீதிமன்றத்தில் ஆய்வு செய்யப்பட வேண்டும். மணிப்பூரில் நடந்தது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. மாநிலத்தில் பா.ஜ.க அரசு உள்ளது. மத்தியிலும் பா.ஜ.க அரசு தான் உள்ளது. எனவே யாராவது இந்த பிரச்சனைக்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.
மணிப்பூரின் மிகவும் மோசமான சூழல் தொடர்பாக விவாதம் நடத்தப்பட்டு பிரதமர் மோடி அதற்கான விளக்கம் அளிப்பார் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பே நாடாளுமன்ற வளாகத்தில் முன் நின்று கவலையோடு பேட்டியளித்தார். அதன் பின்னர் நாடாளுமன்ற இரு அவைகளிலும் பலமுறை அளிக்கப்பட்ட ஒத்திவைப்பு தீர்மானங்களை அவைத்தலைவர்கள் ஏற்கவில்லை.
என்வே, எந்த ஒரு அரசுக்கும், முக்கியமாக இருக்க வேண்டிய நன்னடத்தை, ஒழுக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் என்ற கோட்பாட்டை அமல்படுத்துவதற்காக இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருவதை தவிர எதிர்கட்சி கூட்டணிக்கு வேறு வழி இல்லை. எனவே, இந்த சூழ்நிலையிலும் மணிப்பூர் பிரச்சனை குறித்து பிரதமர் விளக்கம் அளிக்காமல் இருந்தால் அது கேலிக்கூத்தாக ஆகிவிடும்” என்று கூறினார்.