சபரிமலையில் நேற்று முன்தினம் இரண்டு இளம் பெண்கள் நுழைந்ததையடுத்து, கேரளா முழுவதும் பெருமளவில் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன. இதனை கட்டுப்படுத்தும் வகையில் அம்மாநில காவல்துறை 'ஆபரேஷன் ப்ரோக்கன் விண்டோ' என்ற பெயரில் புதிய முயற்சியை எடுத்துள்ளது. இதன் மூலம் கலவரம் ஏற்படுத்த முயல்பவர்கள் பிணையில்லா வழக்கின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநில காவல் ஆணையர் லோக்நாத் பெஹேரா உத்தரவின்படி இதுவரை 745 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கலவத்தை தூண்டியதாக இதுவரை 559 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 628 நபர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். வரவிருக்கும் நாட்களிலும் இந்த நடவடிக்கைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இரவில் சபரிமலை மட்டுமல்லாது மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் போலிஸார் ரோந்து மேற்கொள்ள உள்ளனர். இதற்காக ஒவ்வொரு மாவட்ட காவல்துறைக்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிடிக்கப்பட்டவர்கள் குறித்த அறிக்கை ஒவ்வொரு நாளும் காலை 8 மணியளவில் சமர்ப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற கலவரங்கள், போராட்டங்களின் பொது எடுக்கப்பட்ட புகைப்படங்களை கொண்டு அவர்கள் அடையாளம் காணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சமூகவலைதளங்களில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசும் இருவர் மீதாவது தினமும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆபரேஷன் மூலம் கேரளாவில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.