கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் சனிக்கிழமை திருவனந்தபுரத்தில் பத்திரிகையாளரிடம் பேசும்போது, ஆனி மாதப் பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, வரும் 14ஆம் தேதி திறக்கப்படுகிறது. 14ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை மாத பூஜையும், திருவிழாவும் நடைபெறும். 28ஆம் தேதி ஆறாட்டு நிகழ்ச்சி நடைபெறும். தற்போதைய சூழ்நிலையில் சபரிமலையில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
ஒரு மணி நேரத்தில் 200 பேருக்கு மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். அதிகாலை 4 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 16 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். ஒரே சமயத்தில் கோயில் வளாகத்தில் 50 பேருக்கு மட்டுமே அனுமதி உண்டு. அடுத்த வரிசையில் 50 பேர் நிறுத்தப்படுவார்கள். வரிசையில் நிற்பவர்கள் சமூக அகலத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். 10 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கும், 65 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும் முன்பதிவு செய்ய முடியாது. பம்பையிலும், சன்னிதானத்திலும் தெர்மல் ஸ்கேனர் மூலம் பக்தர்கள் பரி சோதிக்கப்படுவார்கள்.
பக்தர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். கைகளைச் சோப்புப் பயன்படுத்திக் கழுவுவதற்கும், கிருமிநாசினி பயன்படுத்துவதற்கும் சபரிமலையில் வசதி ஏற்படுத்தப்படும். சபரிமலை வரும் பக்தர்கள் தங்குவதற்கு வசதி இருக்காது. கொடியேற்றம் மற்றும் ஆராட்டு விழா சம்பிரதாய முறைப்படி மட்டுமே நடைபெறும். பக்தர்கள் நெய்யபிஷேகம் செய்ய வசதி ஏற்படுத்தப்படும். ஆனால் பக்தர்கள் தாங்கள் கொண்டு வரும் நெய்யை அபிஷேகம் நடத்தி பின்னர் அதே நெய் திரும்ப வேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது. அபிஷேகம் நடத்திய நெய்யைப் பக்தர்கள் வாங்கிக்கொள்ளலாம் பக்தர்கள் கேரள அரசு பஸ்கள் மூலமும், தங்களது சொந்த வாகனங்கள் மூலமும் வரலாம்.
பம்பை வரை பக்தர்கள் தங்களது வாகனங்களில் செல்ல அனுமதி உண்டு. ஆனால் கனமழை பெய்தால் வாகனங்களை நிறுத்த முடியாது. சபரிமலைக்கு 5 பேர் கொண்ட குழுக்களாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். வெளிமாநில பக்தர்கள் 'கோவிட் 19 ஜாக்ரதா' என்ற செயலி மூலம் பாசுக்கு விண்ணப்பிக்கவேண்டும். விண்ணப்பிக்கும்போது 2 நாள் முன்பு கரோனா பரிசோதனை நடத்தப்பட்ட நகலையும் இணைத்தால் மட்டுமே சபரிமலைக்குப் பயண அனுமதி வழங்கப்படும். சபரிமலையில் பக்தர்களுக்கு மருத்துவ வசதி ஏற்படுத்தப்படும். அப்பம் மற்றும் அரவணை பிரசாதம் ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்து வாங்க முடியும். சபரி மலையில் வண்டிப் பெரியார் வழியாக வரும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று கூறினார்.