அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவை தொகுதியின் உறுப்பினருமான ராகுல்காந்தி தலைமையில் எம்.பி.க்கள் அடங்கிய காங்கிரஸ் குழுவினர் உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸுக்கு புறப்பட்டனர்.
ஹத்ராஸில் கொல்லப்பட்ட இளம்பெண் குடும்பத்துக்கு ஆறுதல் கூற ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் குழு செல்கிறது. ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி காரிலும், ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸ் குழுவினர் பேருந்திலும் செல்லும் நிலையில் 5 பேர் மட்டுமே ஹத்ராஸுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர் என உத்தரபிரதேச போலீசார் அவரிடம் தெரிவித்துள்ளனர்.
ராகுல் காந்தி மற்றும் பிரியங்காவுடன் 5 பேர் மட்டும் செல்லலாம் என போலீசார் அனுமதி அளித்திருந்த நிலையில், தங்கள் உடன் வந்த எம்.பிக்கள், முக்கிய தலைவர்கள் ஆகியோரையும் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அதேபோல், கூடுதலாக நபர்கள் செல்லவும் அனுமதி வழங்கக் கோரி உத்தரபிரதேச மாநில எல்லையில் ராகுல் மற்றும் பிரியங்கா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியினர் வருகையை ஒட்டி டெல்லி- உத்தரபிரதேச மாநில எல்லையில் அதிக அளவு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
ஏற்கனவே ஹத்ராஸ்க்கு சென்ற ராகுல் காந்தி போலீசாரால் கீழ தள்ளிவிடப்பட்ட சம்பவம் கட்சியினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தி நாடு முழுவதும் போராட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.