Skip to main content

“ஒரு நாடு; ஒரு மதம்...” - பா.ஜ.க.வை விமர்சித்த தேஜஸ்வி யாதவ்

Published on 02/09/2023 | Edited on 02/09/2023

 

"One Nation One Religion..." - Tejashwi Yadav Criticizes BJP

 

‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்ற கூற்றைப் பல வருடங்களாகவே ஒன்றிய பா.ஜ.க. அரசு வெளிப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்புக் குழு ஒன்றை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. 

 

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து இந்த குழு ஆய்வு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் முன்னாள் தேர்தல் அதிகாரிகள் இடம் பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 18ல் இருந்து 22 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில், ‘ஒரே நாடு ஒரு தேர்தல்’ என்பதற்கான சட்டத் திருத்தங்களைக் கொண்டு வர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

ஒன்றிய அரசின் இந்த ‘ஒரே நாடு ஒரு தேர்தல்’ திட்டத்திற்கு தி.மு.க. உட்பட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பீஹார் துணை முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “மக்களுக்கு வலுவான ஒன்று தேவை. அதனைத் தான் நாங்கள் (இந்தியா) தயார் செய்து வருகிறோம். தற்போது ஆலோசனைக் குழு ஒன்றை உருவாக்கியுள்ளோம்” என்றார். 

 

தொடர்ந்து பேசிய அவர், “ஒரு நாடு ஒரு தேர்தல் என்பதற்கு முன்பாக அவர்கள், ஒரு நாடு ஒரு வருமானம் எனும் திட்டத்தை கொண்டுவரவேண்டும். முதலில் மக்களுக்கான நிதி நியாயத்தை உருவாக்க வேண்டும். ஒட்டுமொத்த நாட்டையும் கட்டுப்படுத்த பா.ஜ.க. முனைப்புக் காட்டுகிறது. அதன்பிறகு ஒரு நாடு ஒரு தலைவர்; ஒரு நாடு ஒரு கட்சி என்று சொல்வார்கள். அவர்களின் இந்தப் பயணம் ஒரு நாடு ஒரு மதம் எனும் வழியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது எனும் சந்தேகம் எழுகிறது” என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்