புதுச்சேரியின் பதினான்காவது சட்டப்பேரவையின் நான்காவது கூட்டத்தொடர் இருபதாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடந்த 20-ஆம் தேதி புதுச்சேரி முதலமைச்சரும், நிதித்துறை அமைச்சருமான நாராயணசாமி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தார். அதன்பின்பு கூட்டத்தொடரில் பல்வேறு விவாதங்கள் நடந்து அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
இதனிடையே புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 2,421 பேர் கரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 34 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இன்றைய பேரவை கூட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பது குறித்து அமைச்சர்கள், காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவித்தனர்.
அப்போது பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, "புதுச்சேரி மாநிலத்தில் கரோனா நிவாரண நிதியாக, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூபாய் 9.16 கோடி வந்துள்ளது. கட்டுப்படுத்தப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு தலா 700 ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசியப்பொருட்கள் வழங்கப்படும். மேலும் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் நிவாரணம் நிதி வழங்கப்படும்" என அறிவித்தார்.