ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பதட்டமான சூழல் நிலவி வந்த நிலையில், இன்று காலை மாநிலங்களவை கூடியதும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்வதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.
மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதாகவும் அறிவித்தார். அதன்படி சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு-காஷ்மீர் செயல்படும் என்றும். சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் செயல்படும் என்றும் அறிவித்துள்ளார். அமித்ஷாவின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவையில் கூச்சலிட்டனர்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370 பிரிவை ரத்து செய்யும் மத்திய அரசின் இந்த முடிவு குறித்து பேசியுள்ள ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா, "எங்களிடம் பொய் சொல்லி எங்களை வீட்டுச் சிறையில் அடைத்துவிட்டு இந்த துரோகத்தை இந்திய அரசு செய்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு எதிராக எதுவும் திட்டமிடப்படவில்லை எனக் கூறிவிட்டு காஷ்மீரின் ஜனநாயகக் குரலை முடக்கி லட்சக்கணக்கான ஆயுதம் தாங்கிய வீரர்களை மாநிலம் முழுவதும் நிறைத்துள்ளது எவ்விதத்தில் நியாயம்" என கேள்வி எழுப்பியுள்ளார்.