ஓமன் நாட்டை 1970- ஆம் ஆண்டு முதல் ஆட்சி செய்து வந்த அந்நாட்டின் மன்னர், சுல்தான் காபூஸ் பின் சையத் அல் சையத் (79) காலமானார்.
காபூஸ் தனது தந்தையின் ஆட்சியை கவிழ்ந்து 1970 ஜூலை மாதம் ஓமன் நாட்டின் மன்னனாக பொறுப்பேற்று கொண்டார். வளைகுடா பகுதியில் ஒரு நாட்டின் மன்னராக நீண்ட காலம் இருந்தவர் என்ற பெயர் பெற்ற காபூஸ் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் பெல்ஜியத்தில் சிகிச்சை பெற்று நாடு திரும்பியிருந்த நிலையில், அவர் நேற்று (11.01.2020) உயிரிழந்துள்ளார்.
அடுத்த அரசர் யார் என்பதை அவர் வெளிப்படையாக அறிவிக்காத நிலையில், அந்நாட்டின் அரசியலமைப்பின் 6 வது பிரிவுப்படி, காலியாக உள்ள அரச பதவிக்கு மூன்று நாட்களுக்குள் அரச குடும்பம் ஒரு புதிய சுல்தானைத் தேர்வு செய்ய வேண்டும். அப்படி அரச குடும்ப சபை யாரையும் தேர்வு செய்யாத நிலையில், சுல்தான் காபூஸ் எழுதி வைத்த கடிதத்தில் யார் பெயர் உள்ளதோ அவர்கள் அரசராக்கப்படுவர். அந்த கடிதம் இராணுவ மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் இரண்டு நாடாளுமன்ற ஆலோசனைக் குழு தலைவர்கள் முன்னிலையில் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஓமன் நாட்டு மன்னர் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக இந்தியாவில் நாளை (13.01.2020) அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அறிவித்துள்ளது. அதன்படி தேசியக் கொடி நாளை (13.01.2020) அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்; அரசு சார்ந்த நிகழ்ச்சிகள் நாளை நடக்காது என்பது குறிப்பிடத்தக்கது.