ஒடிசா மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு மூன்று ரயில்களுக்கு இடையே ஏற்பட்ட விபத்தின் காரணமாக தற்போது வரை 288 பேர் இறந்துள்ளதாகத் தகவல் வெளிவந்த நிலையில், 275 பேர் இறந்துள்ளதாக ஒடிசா மாநிலத் தலைமைச் செயலர் பிரதீப் ஜனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே சொல்லப்பட்ட பலி எண்ணிக்கைகள் என்பது சில சடலங்களை மீண்டும் எண்ணியதால் ஏற்பட்ட குழப்பத்தால் தவறாக அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காண வைக்கப்பட்டுள்ள நிலையில் 275 பேரில் 88 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது. மீதமுள்ள உடல்களை அடையாளம் காண சடலங்களின் புகைப்படங்களை காட்சிப்படுத்த மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இணையதளங்களிலும் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விபத்து குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என ரயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ளது. ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இது குறித்த அறிவிப்பில் 'மீட்பு பணிகள் நிறைவடைந்து தற்போது சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து இந்த விபத்து குறித்து சிபிஐ விசாரிக்க பரிந்துரை கொடுக்கப்பட்டுள்ளது' என தெரிவித்துள்ளார்.