ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து உலக அளவில் பெரும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதில் 275 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த விபத்து குறித்து 11 கேள்விகளை ஆளுங்கட்சியான பாஜக அரசுக்கு முன் வைத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒடிசாவில் நிகழ்ந்தது இந்திய வரலாற்றிலேயே நிகழ்ந்த மிக மோசமான ரயில் விபத்து. விலைமதிப்பற்ற பல உயிர்கள் போயிருக்கிறது. இது ஒவ்வொரு இந்தியனையும் உலுக்கி இருக்கிறது.
கேள்வி1: இந்தியாவில் மட்டும் ஒரு நாளில் ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை ஆஸ்திரேலியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகைக்கு இணையானது. அப்படிப்பட்ட ரயில்வே துறையில் காலியாக உள்ள மூன்று லட்சம் பணியிடங்களை ஒன்பது ஆண்டுகளாக பாஜக ஏன் நிரப்பவில்லை?
கேள்வி 2: பயணிகள் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கும் ரயில் ஓட்டுநர்களை போதிய அளவு நியமிக்காமல், இருக்கும் ஓட்டுநர்களை கூடுதல் நேரம் பணிபுரியும்படி கட்டாயப்படுத்துவது எந்த வகையில் நியாயமானது?
கேள்வி 3: சிக்னல் சிஸ்டத்தில் பழுது இருப்பதாக உயர் அதிகாரி எழுதிய கடிதத்தை ஏன் கண்டுகொள்ளவில்லை?
கேள்வி 4: ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தை வலுப்படுத்தி அதன் தன்னாட்சியை உறுதி செய்யாதது ஏன்?
கேள்வி 5: ரயில் தடம் புரளும் நிகழ்வுகள் அதிகரித்த போதிலும் கிழக்கு ரயில்வேயில் உள்ள இருப்புப் பாதைகள் ஏன் முறையாக பராமரிக்கப்படவில்லை?
கேள்வி 6: இருப்புப் பாதை சீரமைப்புக்கு தேவையான நிதியை ஒதுக்காதது ஏன்?
கேள்வி 7: இந்திய ரயில்வேயில் நான்கு சதவீத வழிதடங்களில் மட்டுமே 'கவாச்' பாதுகாப்பு கருவி பொருத்தப்பட்டிருப்பது ஏன்?
கேள்வி 8: தனியார் மயமாக்கலுக்கு வழிவகுக்கும் வழியிலேயே ரயில்வே பட்ஜெட் பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டதா?
கேள்வி 9: மூத்த குடிமக்களுக்கான கட்டணச் சலுகை ரத்து; வயதானவர்களுக்கு மேல் படுக்கை ஒதுக்கப்படுவது என பல வகைகளில் மக்களை சிரமப்படுத்துவது ஏன்?
கேள்வி 10: குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிபிஐயிடம் ரயில்வே விபத்து விசாரணை ஏன் ஒப்படைக்கப்பட்டது?
கேள்வி 11: கான்பூரில் 2016 ஆம் ஆண்டு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டபோது விசாரித்த என்.ஐ.ஏ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய மறுத்துவிட்டது. அந்த விபத்தில் 150 பேர் உயிரிழந்ததற்கு யார் பொறுப்பு?
என கேள்விகளை முன்வைத்துள்ளார் கார்கே.