ஒடிசா மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மூன்று ரயில்களுக்கு இடையே ஏற்பட்ட விபத்தின் காரணமாக தற்போது வரை 288 பேர் இறந்துள்ளதாகத் தகவல் வெளிவந்த நிலையில், 275 பேர் இறந்துள்ளதாக ஒடிசா மாநிலத் தலைமைச் செயலர் பிரதீப் ஜனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே சொல்லப்பட்ட பலி எண்ணிக்கைகள் என்பது சில சடலங்களை மீண்டும் எண்ணியதால் ஏற்பட்ட குழப்பத்தால் தவறாக அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் விபத்து நடைபெற்ற பகுதியில் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு விபத்தில் இறந்தவர்களை, உயிருக்குப் போராடியவர்களை மீட்டனர். அது மட்டுமின்றி விபத்து நடைபெற்ற ரயில் பெட்டிகளிலும், தண்டவாளங்களிலும், அதன் அருகிலும் ஏராளமான பொருட்கள் சிதறிக் கிடந்துள்ளன. இவற்றையும் மீட்புப் படையினர் மீட்டு வருகின்றனர். அந்த வகையில் குழந்தைகளின் ஓவியப் புத்தகங்கள், பொம்மைகள், காதல் கடிதங்கள் எனச் சிதறிக் கிடக்கின்றன. இது தொடர்பான புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் இருந்தபோது தண்டவாளத்தில் பை கிடந்துள்ளது. அதன் அருகிலேயே டைரி ஒன்று இருந்துள்ளது. அதில் வண்ண வண்ண எழுத்துகளில் நிறைய ஓவியங்களுடன் காதல் கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. அந்த கவிதையானது பெங்காலி மொழியில் எழுதியிருக்கும் காதல் கடிதம். இந்த கடிதம் சமூக வலைத்தளங்களில் பெருமளவில் வைரலாகி வருகிறது. அந்த கவிதையை எழுதியவர் பற்றிய எந்த விபரமும் தெரியவில்லை. இருப்பினும் மக்கள் மனதில் இந்த கவிதை இடம் பெற்றுள்ளது. அதன் அருகிலேயே பொம்மைகள் சிதறிக் கிடந்தன. இந்த புகைப்படத்தைக் காண்பவர்கள் மத்தியில் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.