கரோனா தாக்கம் இந்தியாவில் கடந்த சில மாதங்களாக குறைந்துவரும் நிலையிலும், அது சராசரி மனிதர்களிடம் ஏற்படுத்திய பாதிப்பு மட்டும் இன்றும் குறைந்தபாடில்லை. பாமரன் முதல் பணக்காரர் வரை இந்தக் கரோனா ஏதோ ஒருவகையில் அவர்களின் வாழ்க்கையில் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வகையில் பல்வேறு மனிதர்களின் தொழிலையே இந்த தொற்று புரட்டிப் போட்டுள்ளது. கல்லூரியில் ஆசிரியர்களாக இருந்தவர்கள் பிரியாணி கடை வைத்த சம்பவங்கள் எல்லாம் தமிழ்நாட்டில் நடைபெற்றது.
இந்நிலையில், உயிரைக் காப்பாற்றும் மிக முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒடிசாவைச் சேர்ந்த செவிலியர் ஒருவர், கரோனா காரணமாக தனியார் மருத்துவமனை பணி நீக்கம் செய்ததால், தற்போது உணவு டெலிவரி செய்யும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். சஞ்சுக்தா என்ற அந்தப் பெண், புவனேஷ்வர் பகுதியைச் தேர்ந்தவர். வேறு வேலை கிடைக்கும்வரையில் தான் இந்தப் பணியை செய்வேன் என்றும், எந்த வேலையும் குறைவானது இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவரது புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.