இந்தியப் பொருளாதாரம் பஞ்சரான கார் டயர்களைப் போல உள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் படும் இன்னல்கள் குறித்தும் அவர் விவாதித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ப.சிதம்பரம், ‘தனியார் முதலீடு, தனியார் நுகர்வு, ஏற்றுமதி மற்றும் அரசாங்க செலவினங்கள் ஆகிய இந்த நான்கும்தான் இந்திய பொருளாதாரத்தை வளர்க்கும் இயந்திரங்கள். இவற்றை ஒரு காரின் நான்கு டயர்களாக வைத்துக்கொள்ளலாம். இவற்றில் ஒன்று அல்லது இரண்டு டயர்கள் பஞ்சரானாலே, பொருளாதாரத்தின் வேகம் குறைந்துவிடும். நம் நாட்டிலே இவற்றில் மூன்று டயர்கள் பஞ்சராகி கவலைக்கிடமான நிலையில் இருக்கிறது. சுகாதாரம் மற்றும் இதர வசதிகளுக்காகத்தான் அரசாங்க செலவினம் இருக்கிறது. அது அதிகரித்துக்கொண்டே இருக்க, பெட்ரோல், டீசல் மீதான விலையை அரசு அதிகரிக்கிறது. அவற்றின் விலை அதிகரிப்பதால், விலையேற்றம் என்ற பெரிய சுமை மக்களின்மீது விழுகிறது’ என தெரிவித்துள்ளார்.
மேலும், ஐந்து வகையினங்களைக் கொண்ட ஜி.எஸ்.டி.யை எப்படி ஒரே வரிமுறை என்று சொல்லமுடியும்? ஜி.எஸ்.டி.யின் நோக்கமே தவறாக செயல்படுத்தப் பட்டிருப்பதாகவே தெரிகிறது எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.