கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரியை அடுத்த நாதாபுரம் பஞ்சாயத்து துணைத்தலைவராக இருந்த மஞ்சு, மகிளா காங்கிரசின் மாவட்ட செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். இவர் தொடர்பான ஆபாச வீடியோ வாட்ஸ்அப்பில் பகிரப்பட்டு வந்தது. இது கேரள அரசியல் கட்சியினரிடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, மஞ்சு தன்னுடைய கட்சிப் பதவி, பஞ்சாயத்து துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய தலச்சேரி சைபர் க்ரைம் போலீசாருக்கு, விசாரணையில் அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் கிடைத்தன.
அந்த விசாரணையில், காங்கிரஸ் பெண் பிரமுகரின் ஆபாச வீடியோ அவருக்கு தெரியாமல் எடுக்கப்படவில்லை. அவருக்குத் தெரிந்தேதான் வீடியோ காலின் மறுமுனையில் இருந்தவர் அதை பதிவு செய்திருக்கிறார். மேலும், இவரைப்போல் பல பெண்களின் வீடியோக்கள் வைரலாகியிருக்கிறது. வட மாநிலங்களில் இருந்து இங்கு வட்டி தொழிலில் ஈடுபடும் பா.ஜ.க பின்புலமுள்ள சேட்டுகள் பலர், உள்ளூரைச் சேர்ந்த சிலரை கையில் வைத்துக்கொண்டு அவர்கள் மூலம் பெண்களை குறிவைத்து வட்டிக்கு பணம் கொடுக்கிறார்கள். அந்த பெண்கள் பணம் வாங்கிக் கொண்டு வட்டியை ஒழுங்காகக் கொடுக்கவில்லை என்றால் அந்த வட்டியைக் கழிக்கும் விதமாக பெண்கள், சேட்டின் வீடியோகாலில் முழு நிர்வாணமாக தங்களை வெளிப்படுத்தினால் குறிப்பிட்ட வட்டியைக் கழித்துவிடுவதாகக் கூறப்படுகிறது.
அந்த வகையில், காங்கிரஸ் பெண் பிரமுகர் மஞ்சு, குஜராத்தைச் சேர்ந்த சேட்டிடம் 5 லட்சம் ரூபாய் வாங்கியிருக்கிறார். தொடர்ந்து 3 மாதம் வட்டி கொடுக்காததால், அந்த சேட் வசூல் செய்பவன் மூலம் மஞ்சுவை ஆபாச வீடியோ காலில் வரச் சொல்லியிருக்கிறார். முதலில் தயங்கிய மஞ்சு, பின்னர் மனதை திடப்படுத்திக் கொண்டு வீடியோ காலில் சென்றிருக்கிறார். அந்த வீடியோவை செல்போனில் ஸ்க்ரீன் ரெக்கார்டு செய்துகொண்ட சேட், அதன்பிறகு கொடுத்த பணத்தையும் அதற்கான வட்டியையும் கேட்டுள்ளார். மேலும், பணத்தை உடனே செட்டில் பண்ணவில்லை என்றால் அந்த வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த மஞ்சு, ‘என்னால் வட்டி தரமுடியாது அசல் மட்டும் கொஞ்சம் கொஞ்சமாகத் தருகிறேன்’ என்று கூறியிருக்கிறார். அதற்குச் சம்மதிக்காத சேட், தொடர்ந்து மிரட்டியதால், போலீசில் புகார் அளிப்பதாக மஞ்சு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சேட், அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதே போல், அந்த சேட் பல பெண்களிடம் இது மாதிரி வீடியோ கால் செய்து அவர்களை மிரட்டியிருக்கிறார் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எர்ணாகுளத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஒருவரிடம் இதுபோல் கேரளத்தில் வேறு ஏதாவது சம்பவங்கள் நடந்திருக்கிறதா என பேசினோம். அப்போது அவர், ‘கேரளாவில் மட்டு மல்ல. தமிழ்நாட்டிலும் இப்படி நடக்கிறது. வடமாநிலங்களிலிருந்து இங்கு வியாபாரிகளாக இருக்கும் சேட்டுகளில் பெரும்பாலானோர் வட்டித் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார்கள். பணம் கொடுப்பதற்கும், வட்டி வசூல் செய்து கொடுப்பதற்கும் இங்குள்ளவர்களைப் பயன்படுத்துகிறார்கள். பணம் வாங்கிய பிறகு கஷ்டத்தில் வட்டியும், முதலும் கொடுக்க முடியாமல் இழுத்தடிக்கும் பெண்களை இந்த மாதிரி தங்களின் வலையில் சிக்கவைத்து பின்னர் அந்த வீடியோவைக் காட்டி மிரட்டும்போது மானத்திற்குப் பயந்து, அந்த பெண்கள் எப்படியாவது பணத்தை புரட்டிக் கொடுக்கிறார்கள். ஒருவேளை ஆண்கள் பணம் கேட்டாலும் அவர்களின் குடும்பத்திலுள்ள பெண்களின் பெயரில்தான் பணம் கொடுக்கிறார்கள்.
சமீபத்தில் ஆலப்புழா சேர்த்தல பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது மகளின் திருமணத்திற்காக மகள் பெயரிலிருந்த வீட்டுப் பத்திரத்தை சேட்டிடம் அடமானம் வைத்து மகள் பெயரிலே பணம் வாங்கியிருக்கிறார். அதன்பிறகு அவரால் வட்டி ஒழுங்காகக் கட்டமுடியாததால் அந்த சேட் திருமணமாகிச் சென்ற அந்த பெண்ணை வட்டி கேட்டு டார்ச்சர் செய்திருக்கிறார். வட்டிப்பணம் கட்டவில்லையென்றால் வீட்டை தனது பெயரில் மாற்றிக்கொள்வதாக மிரட்டியுள்ளார். இந்தச்சூழலில் வட்டி வசூல் செய்யும் நபர், அந்த பெண்ணிடம் வட்டியைக் கழிக்க வேண்டுமென்றால் சேட்டிடம் வீடியோ காலில் பேச வேண்டும் என்றிருக்கிறார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண், ஏற்கனவே உள்ள நெருக்கடியால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இச்சம்பவம் சேட்டின் செல்வாக்கால் அவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்காமல் பேசி முடிக்கப்பட்டது. ஒருசில வக்கிரபுத்தி கொண்ட சல்லாப சேட்டுகள்தான் இப்படி வட்டித் தொழிலை நடத்துகிறார்கள்’என்றார்.