கேரளாவில் இரண்டு சிறுவர்களுக்கு 'நோரா' எனும் புதிய வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை கேரள மாநில அரசு உறுதி செய்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின்படி, நோரா எனும் புதிய வகை வைரஸ் பாதிப்பால் கடுமையான இரைப்பை மற்றும் குடல் அழற்சி ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதன் அறிகுறிகளாக கடுமையான வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை ஏற்படும். இந்த நிலையில், கேரள மாநிலம் கொச்சியில் உள்ள காக்னட் பகுதியில் ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு பயின்று வரும் இரண்டு சிறுவர்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்பொழுது இரண்டு சிறுவர்களுக்கும் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மாவட்டத்தில் மேலும் 62 சிறுவர்களுக்கு நோரா வைரஸ் பாதிப்பிற்கான அறிகுறிகள் இருப்பதாகவும், அதன் காரணமாக சிறுவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோரா வைரஸ் பாதிப்பு காரணமாக இரண்டு சிறுவர்கள் பயின்று வந்த பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.